வூஹானுக்கு வருகை அளித்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங்

வூஹானுக்கு வருகை அளித்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங்

2 mins read
56203a24-8771-446b-81bb-d05103b58c87
வூஹானில் உள்ள மருத்துவமனை ஒன்றின் செயல்பாடுகள் குறித்து சீன அதிபர் ஸி ஜின்பிங் (நடுவில்) அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்ஜிங்: மத்திய சீனாவின் வூஹான் நகரில் கொரோனா கிருமி கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கியதை அடுத்து, சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று அங்கு முதன்முறையாக வருகை அளித்தார்.

அவரது வருகை, சீனாவில் கிருமிப் பரவல் கட்டுக்குள் இருப்பதைக் காட்டுவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். வூஹான் நகருக்கு திரு ஸி பயணம் மேற்கொள்வார் என்பது குறித்து முன்னதாக அறிவிக்கப்படவில்லை.

வூஹானில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பார்வையிட தனி விமானம் மூலம் திரு ஸி அங்கு வந்தார்.

முகக்கவசம் அணிந்திருந்த திரு ஸி, வூஹானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் முதல்நிலை மருத்துவ ஊழியர்களிடம் காணொளி மூலம் உரையாடுவதைப் புகைப்படங்கள் காட்டின.

அதன் பின்னர் ராணுவ அதிகாரிகள், சமூக ஊழியர்கள், போலிஸ், நோயாளிகள், குடியிருப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை திரு ஸி சந்தித்ததாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதற்கு முன்னதாக, கிருமித்தொற்று நிலவரத்தை ஆராய சீனப் பிரதமர் லி கெச்சியாங் வூஹான் நகருக்குச் சென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

அண்மைக் காலமாக சீனாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் வேளையில், கிருமிப் பரவலுக்கு எதிரான போரில் அதிபர் ஸியின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக சீன அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், வூஹான் நகரில் கிருமித்தொற்று சம்பவங்கள் உச்சத்தை எட்டியபோது திரு ஸி வருகை அளிக்கவில்லை என்றும் நிலைமை மேம்பட்ட பிறகு பாராட்டு பெறுவதற்காகவே அவர் தலையைக் காட்டி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குமுறுகின்றனர்.

உலகம் முழுவதும் 4,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

சீனாவில் தொடங்கிய கொரோனா கிருமித்தொற்று இப்போது உலகின் ஏராளமான நாடுகளுக்குப் பரவிவிட்டது. உலகளவில் கிருமித்தொற்றுக்கு இதுவரை 4,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதோடு, 110,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் நேற்று புதிதாக 19 கிருமித்தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவாகின. ஜனவரி 21ஆம் தேதியிலிருந்து நாள் ஒன்றுக்கு இவ்வளவு குறைவாக புதிய சம்பவங்கள் பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை.