சமூகப் பொறுப்புணர்வு தேவை

1 mins read
ee4bae70-498c-4b92-94bc-d90b2e2fbd27
-

சிங்கப்பூர்: ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் 'சிங் மிங்' விழாவை முன்னிட்டு சீனர்கள் தங்களின் இறந்த உறவினர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்வர். தகனச்சாலை மற்றும் சாம்பல் காப்பகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தற்போதைய கொரோனா கிருமித் தொற்று நிலை கருதி, சமூகப் பொறுப்பு உணர்வுடன் நடந்துகொள்ளுமாறு தேசிய சுற்றுப்புற அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. உடல்நலமில்லாதவர்கள் வீட்டில் இருக்குமாறு அல்லது மருத்துவரைச் சென்று பார்க்குமாறு கூறப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர் உடல் நலமில்லாத நிலையிலும் வேலை, நிகழ்வுகள் ஆகியவற்றுக்குச் சென்றதாக நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஒரு மருத்துவரை மட்டும் பார்க்காமல் பல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றவர்களும் உள்ளதாக அவர் சுட்டினார். பாதிக்கப்பட்டுள்ள 160 பேரில் 35 பேர் இவ்வாறு பொறுப்பற்று நடந்துகொண்டதாக அமைச்சர் கான் தெரிவித்தார்.