இந்தோனீசியாவில் முதல் கிருமித்தொற்று மரணம்

இந்தோனீசியாவில் முதல் கிருமித்தொற்று மரணம்

1 mins read
3cdb3bb4-d6b8-451e-9906-c0d51351f660
படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 53 வயது பிரிட்டிஷ் மாது ஒருவர் இந்தோனீசியாவின் பாலி தீவில் உயிரிழந்துள்ளார். இதுவே நாட்டின் முதல் கிருமித்தொற்று மரணம் என்று நேற்று இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர் பாலி தீவுக்கு வருவதற்கு முன்னரே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டாரா அல்லது வந்த பின்னர் பாதிக்கப்பட்டாரா என்ற தகவல் அறியப்படவில்லை.

சென்ற வாரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மாது, நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு இதற்கு முன் நுரையீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற வேறு நோய்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா கிருமித்தொற்று அவரின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்ததுடன் ஏற்கெனவே அவர் உடலில் இருந்த மற்ற மருத்துவப் பிரச்சினைகளை மோசமாக்கியது என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்கு முன் தான் இந்தோனீசியாவில் முதல் கொரோனா கிருமித்தொற்று சம்பவம் உறுதியானது.

அண்மைய நிலவரப்படி இந்தோனீசியாவில் 34 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களில் இருவர் இரண்டாவது பரிசோதனையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதனால் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவுள்ளனர். அதற்கு முன் சுகாதாரப் பழக்கவழக்கம் குறித்து அவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.

உலகிலேயே மக்கள்தொகை அதிகமுள்ள பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தோனீசியா.

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரான், இத்தாலி, தென்கொரியா முதலிய 10 நாடுகளைச் சேர்ந்தோர் நாட்டுக்குள் வருவதற்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.