மன்னிப்புக் கேட்டு முன்னாள் பிரதமர் மகாதீருக்கு கடிதம் எழுதியிருப்பதாக பிரதமர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
முன்னைய பிரதமரின் உணர்வு களை பாதிக்கும் வகையில் ஏதாவது நடந்திருந்தால் அதற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
புதிய அமைச்சரவை அடுத்த தேர்தல் வரை நீடிக்கும் என்று டாக்டர் மகாதீர் கூறியிருப்பதை தாம் வரவேற்பதாகவும் பிரதமர் முகைதீன் சொன்னார்.
"புதிய அரசாங்கத்தை நாங்கள் அமைத்துள்ளோம். இதனை டாக்டர் மகாதீர் அங்கீகரிக்க வேண்டும் என விரும்புகிறோம். இது, மக்களின் அரசாங்கம். இது, சட்டப் பூர்வமாக அமைக்கப்பட்ட அரசாங்கம்," என்று முதல் அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் முகைதீன் கூறினார்.
டாக்டர் மகாதீருடன் சமரசம் செய்துகொள்ள விருப்பமா என்று கேட்டதற்கு சிறப்பாகச் செயல்படவும் மக்களுக்கு உதவவும் ஆன அனைத்தும் செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.
டாக்டர் மகாதீரை சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
"நாட்டின் நலனுக்காக அவரை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எங்கு வேண்டுமானாலும் சந்திக்க தயார்," என்றார் பிரதமர் முகைதீன்.
இதற்கிடையே தாம் இல்லாத சமயத்தில் அஸ்மின் அலி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று திரு முகைதீன் அறிவித்துள்ளார்.
"மூத்த அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நால்வரும் சமம். நான் இல்லாத நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அஸ்மின் தலைமையேற்பார்," என்று திரு முகைதீன் குறிப்பிட்டார்.

