'திரு அஸ்மின் அலி அமைச்சரவையை வழிநடத்துவார்'

'திரு அஸ்மின் அலி அமைச்சரவையை வழிநடத்துவார்'

2 mins read
6208c978-ffe2-4019-92e7-1e977b561845
(படம்: ராய்ட்டர்ஸ்) -

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், தாம் இல்லாத நேரங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு மூத்த அமைச்சர்களில் ஒருவரான திரு அஸ்மின் அலி அமைச்சரவையை வழிநடத்துவார் என்று தெரிவித்திருக்கிறார்.

"மூத்த அமைச்சர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே," என்று பிரதமர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது 72 வயது திரு முகைதீன் இதனைத் தெரிவித்தார்.

"நான் இல்லாத நேரங்களில் அமைச்சரவையை அஸ்மின் வழிநடத்துவார். அஸ்மின் இல்லாவிட்டால் இஸ்மாயில் சப்ரி வழிநடத்துவார்," என்று திரு முகைதீன் கூறினார்.

துணைப் பிரதமராக ஒருவரை திரு முகைதீன் நியமிக்காதபோதும் அவருக்கு அடுத்த நிலையில் திரு அஸ்மின் இருப்பதை இந்த ஏற்பாடு கோடிகாட்டுவதாகக் கருதப்படுகிறது.

கெஅடிலான் ராக்யாட் கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவராக இருந்த 55 வயது திரு அஸ்மின், அண்மையில் பிகேஆர் கட்சியின் ஒன்பது முன்னாள் உறுப்பினர்களுடன் திரு முகைதீனின் பிரிபூமி பெர்சத்து மலேசிய கட்சியில் இணைந்தார். திரு அஸ்மின் தற்போது அனைத்துலக வர்த்தக, தொழில்துறைக்கு அமைச்சராகவும் பொருளியல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் மூத்த அமைச்சராகவும் இருக்கிறார்.

இந்நிலையில், அரசாங்கச் செலவைக் குறைப்பதற்காக தமது சம்பளத்தைக் குறைக்க தாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக திரு முகைதீன் கூறியுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளும் முதல் நபராகத் தாம் இருக்கப்போவதாக அவர் கூறினார்.

"நான் இந்தச் சவாலை ஏற்கிறேன். என் சம்பளம் 5 முதல் 10 விழுக்காடு வரை குறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்கிறேன். நான் அதனை முதலில் செய்கிறேன். அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இதைச் செய்யலாம்," என்றார் திரு முகைதீன்.

அத்துடன், தமது 31 அமைச்சர்களும் 38 துணை அமைச்சர்களும் தங்களது சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்போவதாக திரு முகைதீன் சூளுரைத்துள்ளார்.