ஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படையினர் தங்கியிருந்த ராணுவ முகாம் ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டதில் குறைந்தது மூன் று பேர் உயிரிழந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே அமைந்துள்ள தாஜி ராணுவ முகாமின் மீது மார்ச் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர், பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர், அமெரிக்க குத்தகையாளர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் தங்கியிருந்த முகாம் 18 ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக அமெரிக்கா வழி நடத்தும் ராணுவக் கூட்டணி தன் அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த ஜனவரியில் மூத்த ஈரானிய தளபதி காசிம் சுலைமானியை ஆளில்லா வானூர்தியால் அமெரிக்கா தாக்கி க் கொன்றதை அடுத்து, மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. அமெரிக்க ராணுவப் படையினர் தங்கியிருந்த அல் அசாத் தளத்தில் ஜனவரி 8ஆம் தேதி ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் 100க்கும் அதிகமான ராணுவ வீரர்களுக்கு மூளையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

