கொரோனா கிருமிப் பரவுவதால் பெரிதளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்வது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என ஜப்பானிய தலைநகர் தோக்கியோவுக்கான ஆளுநர் யுரிக்கோ கோய்க்கே தெரிவித்திருக்கிறார். இவ்வாண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. "உலகெங்கிலும் கிருமி பரவுவதால் பெரிதளவில் தாக்கம் இல்லை எனச் சொல்ல முடியாது. இருந்தாலும், போட்டிகளை ரத்து செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என நான் எண்ணுகிறேன்," என்று குமாரி கோய்கே செய்தியாளர்களிடம் இன்று கூறினார். போட்டிகள் திட்டமிட்டபடியே நடக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதி கூறிவரும் வேளையில், இது குறித்து இறுதியான முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டுள்ள அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு, போட்டிகளை ரத்து செய்வதோ ஒத்திவைப்பதோ பற்றிய எந்தப் பேச்சும் இதுவரை இடம்பெறவில்லை எனத் தெரிவித்தது. கொரோனா கிருமிப் பரவலை "உலகளாவிய தொற்று" என அதிகாரபூர்வமாக வகைப்படுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனத்துடன் அணுக்கமாக ஒத்துழைக்கப்போவதாக அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு கூறியுள்ளது.
'ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று'
1 mins read
-

