இத்தாலியில் கொரோனா கிருமித்தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்றுமுன்தினம் 168 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் மாண்டவர்கள் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது. 12,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு இறப்பு 33% வரை அதிகரித்ததை அடுத்து இத்தாலியில் உணவுக் கடைகள், மருந்தகங்கள், போன்ற அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்து கடைகளையும் வரும் 25 தேதி வரை மூடுமாறு இத்தாலிப் பிரதமர் கியூசெப் கோன்டே உத்தரவிட்டுள்ளார். பொதுப் போக்குவரத்து, அஞ்சலக சேவை, நிதி நிறுவனங்கள் ஆகியவை தொடர்ந்து இயங்கும் எனவும் அத்தியாவசியமில்லாத கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி வீட்டு விநியோகங்களையும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தவிக்கும் ஐரோப்பா
ஜெர்மனியில் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். 1963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 பேர் நோய் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். "ஜெர்மனியில் இன்னும் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். தற்போதைய மக்கள் தொகையில், கொரொனோ வைரசால் 60% முதல் 70% பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்" ஜெர்மானிய அதிபர் ஏஞ்சிலா மெர்கல் தெரிவித்தார்.

