ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு இன்று முதல் 30 நாட்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளையே ஆட்டிப்படைக்கும் கொரோனா கிருமி, எளிதில் பரவும் ஆபத்து உள்ளது என உலக சுகாதார நிலையம் எச்சரிக்கை விடுத்த ஒரு மணி நேரத்தில் அமெரிக்கா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்தத் தடை பிரிட்டனுக்குப் பொருந்தாது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஏனெனில் அங்கு ஐரோப்பிய ஒன்றியத்தைக் காட்டிலும் கொரோனா கிருமிக்கு எதிராக அதிகளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார் அதிபர் டிரம்ப்.
அதேபோல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து நாடு திரும்பும் அமெரிக்கர்கள் தக்க மருத்துவ சோதனை செய்துகொண்டிருந்தார்கள் எனில் அவர்களுக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.
கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் உள்ளோம். சீனாவில் எண்ணற்ற உயிர்களைக் குடித்த கொரோனா கிருமி அமெரிக்காவுக்குள் பரவாமல் இருக்க சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்குத் தடை விதித்தோம். இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு கிருமி பரவியதை அடுத்து, அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் கிருமி தொற்றாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம்.
இனியும் தாமதித்தால் நாம் பெரிய ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என்று அவர் எச்சரித்தார்.
அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை விடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த 14 நாட்களாக 26 ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கும் இது பொருந்தும்.
அத்துடன் அமெரிக்காவின் சட்டபூர்வ நிரந்தரவாசிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்தத் தடைச் சட்டம் பொருந்தாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சரக்கு ஏற்றி வரும் கப்பல்களுக்கும் விமானங்களுக்கும் இந்த தடை பொருந்தாது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஐரோப்பிய பயணத் தடை உலக பொருளியலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கணித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் 28 ஆக இருந்த கொவிட்-19 மரணம் நேற்று 37 ஆக உயர்ந்துள்ளது.

