1எம்டிபி: $240 மில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்க நீதித் துறை பிடித்துக்கொண்டது

1எம்டிபி: $240 மில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்க நீதித் துறை பிடித்துக்கொண்டது

2 mins read
22ad7e19-2c04-489b-82e8-241562562066
-

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியை மலேசியாவிடம் தற்போது திருப்பிக் கொடுப்பது குறித்து அமெரிக்கா நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.

மலேசிய அரசுக்குச் சொந்தமான 1எம்டிபி நிதி கையாடப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து மீட்கப்பட்ட தொகையை மலேசியாவிடம் அமெரிக்கா ஒப்படைக்க உள்ளது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 1எம்டிபி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி தேர்தலில் தோற்றதை அடுத்து பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் நஜிப்புக்கு எதிரான விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு எதிராக வழக்கு பதிவானது. அதுமட்டுமல்லாமல் மீட்கப்பட்ட தொகையை அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் அரசு தெரிவித்திருந்தது.

நஜிப்பின் ஆட்சியின்போது 1எம்டிபியிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகை கையாடப்பட்டதாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்திருந்தது. கடந்த மே மாதத்தில் ஏறத்தாழ 200 மில்லியன் அமெரிக்க டாலரை அது மலேசியாவிடம் திருப்பிக் கொடுத்தது.

அண்மையில் டாக்டர் மகாதீர் பிரதமர் பதவிலியிருந்து விலகியதை அடுத்து கொடுக்கப்பட இருந்த $240 மில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்க நீதித் துறை பிடித்துக்கொண்டது.

தற்போது அம்னோவின் ஆதரவுடன் திரு முகைதீன் யாசின் பிரதமராக இருக்கிறார். அம்னோவின் தலைவராக நஜிப் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை மனதில் கொண்டு தற்போதைய சூழ்நிலையில் 1எம்டிபி பணத்தை மலேசியாவுக்குத் திருப்பிக் கொடுப்பது குறித்து அமெரிக்கா நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றார் டாக்டர் மகாதீர்.

"நாங்கள் ஆட்சி அமைத்தபோது அமெரிக்காவின் நீதித் துறை கையாடப்பட்ட பணத்தை எங்களிடம் ஒப்படைத்தது. ஏனென்றால் அந்தப் பணத்தை கையாடியவர்களை நாங்கள் தேர்தலில் வீழ்த்தினோம்.

"ஆனால் தற்போது பணத்தைத் திருடியவர்களிடமே அது திரும்ப செல்ல இருக்கிறது. அமெரிக்க நீதித் துறை ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும்," என்று டாக்டர் மகாதீர் நேற்று தெரிவித்தார்.

1எம்டிபி மோசடி தொடர்பாக குறைந்தது ஆறு நாடுகள் விசாரணை நடத்துகின்றன.