வாஷிங்டன்: ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளி இயக்கத்தின் ஐந்து ஆயுதக் கிடங்குகளை அமெரிக்கா நேற்று முன்தினம் தாக்கியதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சான பென்டகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு ஒரு நாள் முன்னதாக, கடந்த புதன்கிழமையன்று, காத்தைப் ஹிஸ்புல்லா என்ற அந்தப் போராளி இயக்கம் அமெரிக்க ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தி இரண்டு அமெரிக்க போர்வீரர்களுடன் ஒரு பிரிட்டிஷ் வீரரையும் கொன்றது இங்கு நினைவுகூரத்தக்கது.
"காத்தைப் ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மீது அமெரிக்கா தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் துல்லியத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்தக் கிடங்குகளில் உள்ள ஆயுதங்களை கொண்டுதான் அமெரிக்க, கூட்டணி நாடுகளின் ராணுவ வீரர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்," என்று பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்தது.
"இந்தத் தாக்குதல்கள் துல்லியமானவை, எங்களது தற்காப்பை குறிக்கோளாகக் கொண்டவை, அத்துடன் ஈரானிய ஆதரவு பெற்ற ஷியா போராளிக் குழுக்களுக்கு எதிரானவை," என்று அந்த அறிக்கை விவரித்தது.
ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது கட்யுஷா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது. இதற்கு எதிராக அமெரிக்க ராணுவம் பதிலடி கொடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து கருத்துரைத்த அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் என்பவரும் அமெரிக்க ராணுவத் தளபதி மார்க் மில்லியும் அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது நடத்திய போராளிகளுக்கு ஈரானிய ஆதரவு இருக்கிறது எனத் தாங்கள் நம்புவதாகக் கூறினர். இதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருவதாக அவ்விருவரும் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அதற்கான விளைவுகளை ஏற்க வேண்டும். எங்கள் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி எங்கள் வீரர்களைக் கொன்று, காயப்படுத்திவிட்டு எளிதில் தப்பிவிட முடியாது," என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

