ஏதன்ஸ்: கிரேக்கத்தின் முதல் பெண் பிரதமராக திருவாட்டி எக்காதெரினி சக்கேலாரோபோலோ (படம்) நேற்று பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
63 வயது மூத்த நீதிபதியான திருவாட்டி எக்காதெரினி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கிரேக்கத்தின் புதிய பிரதமராக இருப்பார்.
கிரேக்க நாடாளுமன்றத்தின் அவரது பதவியேற்பு விழா நேற்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போரில் மாண்ட கிரேக்க ராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் கட்டப்பட்ட தேசிய சின்னத்திற்குச் சென்று மலர்வளையம் வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
பொருளியல் நெருக்கடி, பருவநிலை மாற்றம், குடிநுழைவு போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்குத் தாம் முன்னுரிமை வழங்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
கிரேக்கத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கும் நேரத்தில் அவர் பிரதமராகப் பதவி ஏற்கிறார். கிரேக்கத்தில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதும் அவர் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது.

