ஜோகூர் பாரு: அம்னோ ஓர் அரசியல் கட்சி என்றும் அது பெர்சத்து கட்சிக்கும் பிரதமர் முகைதீன் யாசினுக்கும் கீழ் செயல்படும் கட்சி அல்ல என்றும் அம்னோவின் உதவித் தலைவர் முகம்மது காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியினருக்குப் போதுமான அமைச்சர் பதவியை திரு முகைதீன் தரவில்லை என்று அம்னோ வருத்தம் தெரிவித்ததற்கு இதுவே காரணம் என்பதை முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமீது முகம்மது புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று அம்னோ ஆரம்பத்திலிருந்தே கூறி வருவதாக முன்னாள் ஜோகூர் முதலமைச்சரான திரு காலித் தெரிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
"டாக்டர் மகாதீர் எடுத்த நடவடிக்கைகளால் மலேசிய அரசியலில் சர்ச்சைகள் அதிகரித்ததை அடுத்து அம்னோ அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.
"பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் நாட்டின் நலனுக்காக அம்னோவும் பாஸ் கட்சியும் திரு முகைதீனுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தது," என்று திரு காலித் தெரிவித்தார்.
அம்னோ, பாஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் திரு முகைதீன் அரசாங்கம் அமைத்திருக்க முடியாது என்று திரு காலித் வலியுறுத்தினார். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை நிறுவிய கட்சிகளில் அம்னோவும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
"பெர்சத்து கட்சியை சேர்ந்த 35 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் அம்னோ வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வென்றவர்கள். கடந்த தேர்தலில் பெர்சத்து கட்சி வெறும் 13 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதையடுத்து எஞ்சியிருந்தோர் பதவிக்காக கட்சி தாவினர்.
"அமைச்சரவையில் போதுமான அம்னோ கட்சியினர்கள் இல்லை என்று நாங்கள் வருத்தம் தெரிவித்தது பற்றி திரு ஹமீது கவலைப்படத்தேவையில்லை. மாறாக, புதிய அமைச்சரவையின் தரம், நம்பகத்தன்மை ஆகியவை பற்றி அவர் கவலைப்பட வேண்டும்," என்று திரு காலித் தெரிவித்தார்.
"திரு அஸ்மின் அலியை ஆதரிக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மக்களின் முடிவுக்கு மதிப்பு கொடுக்காமல் பதவிக்காக கட்சி மாறிவிட்டனர்.
"அவர்களில் சிலர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இன்னும் பாதுகாக்கப்படுகின்றனர். புதிய அரசாங்கம் நேர்மையானதாக இருக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டும் இத்தகையோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை பொறுத்தே மரியாதை கொடுக்கப்படும்," என்று திரு காலித் தெரிவித்தார். அரசியல் கட்சி என்ற முறையில் நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு அம்னோ அமைதியாக இருக்காது என்றார் அவர்.

