கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் மகன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை அந்நாட்டு பேலிஸ் படையின் தலைமை ஆய்வாளர் அப்துல் ஹமீது பாடோர் மறுத்துள்ளார்.
திரு லிம்மின் மகன் சிங்கப்பூரில் இருப்பதாக தெரிவித்த திரு பாடோர், அவர் சிங்கப்பூரில் கைது செய்யப்படவில்லை என்று நேற்று தெரிவித்தார்.
"இது பொய்யான ஒரு செய்தி என்பது உறுதி. திரு லிம்மின் மகனைக் கைது செய்ததாக சிங்கப்பூர் போலிசாரிடமிருந்து எந்த ஒரு தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது," என்று திரு பாடோர் கூறினார்.
திரு லிம்மின் மகனிடம் மலேசியப் போலிசாரும் விசாரணை நடத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.
"இந்தப் பொய்ச் செய்தியை பரப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க நாங்கள் விசாரணை நடத்துவோம்," என்றார் திரு பாடோர்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவருடைய மகன், தகுந்த ஆவணங்கள் இல்லாமல் சிங்கப்பூருக்குள் $2 மில்லியன் கொண்டு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக சீனமொழி நாளிதழான நன்யாங் சியாங் பாவ்வில் செய்தி வெளியாகி இருந்தது.
அந்த நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி கைது செய்யப்பட்ட அந்த நபர் திரு லிம்மின் மகன் என்று சர்ச்சைக்குரிய வலைப்பதிவான மலேசியா டுடே பதிவு செய்திருந்தது.

