பெட்டாலிங் ஜெயா: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவினால் அவர்களது தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அத்தொகுதி வாக்காளர்களுக்குத் தெரிவு வழங்க வேண்டும் என்று மலேசியாவின் பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் தாமஸ் ஃபான் பரிந்துரை செய்துள்ளார்.
அண்மையில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கூட்டணியிலிருந்து இன்னொரு கூட்டணிக்குத் தாவியதால் ஆட்சி கலைந்தது. இதையடுத்து புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி அல்லது கூட்டணி தாவினால் இடைத்தேர்தல் நடத்தும் தெரிவை வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கான கோரிக்கைப் பட்டியலில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கையெழுத்துகள் பதிவு செய்யப்பட்டால் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பெர்சே கூறியது.
இந்த அணுகுமுறையை அர்ஜெண்டினா, கனடா, ஜெர்மனி, நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ், சுவிட்சர்லாந்து, தைவான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஃபான் தெரிவித்தார்.
இவ்வாறு செய்வதால் ஒரு கட்சியின்கீழ் போட்டியிட்டு தேர்தலில் வெல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவ தயங்குவர் என்று அவர் கூறினார்.

