சிட்னி: வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகள் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். நேற்று நள்ளிரவு முதல் இது நடப்புக்கு வந்தது. அத்துடன் வெளிநாட்டு துறைமுகங்களிலிருந்து வரும் உல்லாசக் கப்பல் களையும் அடுத்த 30 நாட்களுக்கு ஆஸ்திரேலியா அனுமதிக்காது.
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நியூசிலாந்து விதித்துள்ள கட்டுப்பாடு களைப் போலவே ஆஸ்திரேலியாவும் இப்போது விதித்துள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவை கூட்டத்தை நடத்தியதை அடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (படம்) இப்புதிய அதிரடி நடவடிக்கைகளை அறிவித்தார்.
கிருமித்தொற்று உச்சத்தைத் தொடுவதற்குள் அதைக் கட்டுப் படுத்த இக்கடுமையான நடவடிக்கைகள் நடப்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக திரு மோரிசன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஏற்கெனவே கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகமுள்ள இத்தாலி, தென் கொரியா, ஈரான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை அனுமதிக்காது என்று ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது.
இதன்படி இந்த நான்கு நாடு களைச் சேர்ந்தோர் 14 நாட்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் வர அனு மதிக்கப்படமாட்டார்கள்.
ஆனால் இந்நாடுகளிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களும் நிரந்தரவாசிகளும் அனுமதிக்கப்படுவர். இருப்பினும் இரு வாரங் களுக்கு அவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு மீட்டர் தொலைவில் இருப்பது, கை குலுக்காமல் இருப்பது போன்ற சமூகப் பொறுப்புணர்வு பழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோரிசன் யோசனை கூறினார்.
இதற்கிடையே 500 பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடிய கூட்டங்களுக்குத் தேவை இருந்தால் மட்டுமே ஏற்பாடு செய்யுமாறு ஆஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இது பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தாது.
ஆஸ்திரேலியாவில் 250க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத் துடன் மூவர் உயிரிழந்துவிட்டனர்.

