இதுவரை இல்லாத வகையில், கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றால் இத்தாலியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 368 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,809ஆக அதிகரித்தது.
அத்துடன், நேற்று முன்தினம் மேலும் புதிதாக 3,590 பேருக்குக் கிருமி தொற்ற, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 25,000ஐ நெருங்கிவிட்டது.
"இது ஓர் அலையல்ல, ஆழிப் பேரலை," எனக் குறிப்பிட்டார் லோம்பர்டி வட்டாரத்தில் உள்ள மோன்ஸா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் ரொபர்ட்டோ ரோனா.
இத்தாலியில் கிருமித்தொற்று உச்சத்தை எட்டி வருகிறதா, வரும் நாட்களில் அது குறையத் தொடங்குமா என எதுவும் தெரியவில்லை என்று இத்தாலி தேசிய சுகாதார நிலையத்தின் தலைவர் சில்வியோ புருசஃபெரோ தெரிவித்தார்.
கிருமி பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒட்டு மொத்த இத்தாலியும் ஒரு வார காலமாக முடங்கிக் கிடக்கிறது. பள்ளிகள், உணவகங்கள், காப்பி கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லோம்பர்டி வட்டாரத்தில்தான் இத்தாலியின் நிதித் தலைநகரான மிலான் நகரம் அமைந்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதாகக் கூறினார் லோம்பர்டி ஆளுநர் அட்டிலியோ ஃபோன்டனா.
"மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகள் காலியாக இல்லை. செயற்கை சுவாசக் கருவிகள் பற்றாக்குறை நிலவுவதால் வெளிநாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது," என்றார் அவர்.
முகக்கவசத்திற்கான தேவையும் அதிகரித்து வருவதாக மிலான் நகர மேயர் பெப்பே சாலா குறிப்பிட்டார். இந்த நிலையில், சீனாவில் இருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகத் தரமான சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை லோம்பர்டி கொண்டுள்ளது என உலகச் சுகாதார நிறுவனம் தொடர்ந்து பாராட்டி வந்தாலும்கூட, இப்போதைக்கு அங்கு நிலைமை மோசமாகவே உள்ளது.
மிலானிலும் சுற்றுவட்டாரத்திலும் அவசர மருத்துவ வாகனங்களே இல்லை என அந்நகரின் நல்வாழ்வு மன்ற உறுப்பினர் கியுலியோ கேலரா செய்தியாளர்டம் தெரிவித்தார்.
அதேபோல, மருத்துவமனைகளை மேலும் சிரமத்தில் ஆழ்த்தாமல் இருக்க மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே தனித்திருக்கும்படி வெனிஸ் ஆளுநர் வலியுறுத்தி இருக்கிறார்.
வடஇத்தாலியில் உள்ள லோம்பர்டி வட்டாரத்தில் மட்டும் இதுவரை 1,218 பேர் உயிரிழந்து விட்டனர். அத்துடன், அங்கு மேலும் 13,272 பேரை கிருமி தொற்றியுள்ளது.
இத்தகைய சூழலில், அந்த வட்டாரம் மீது தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ஜுசெப்பே கோன்டே கூறி இருக்கிறார்.
பெற்றோர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, சுயதொழில் புரிவோருக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்கள் அடங்கிய புதிய அவசரகால ஆதரவுத் திட்டத்தை அறிவிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்கவிருந்த ஈஸ்டர் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக வத்திகன் அறிவித்து இருக்கிறது.

