தங்கள் நாட்டின் சில பகுதிகளை முடக்கிவிடுவது பற்றி அரசாங்க அதிகாரிகள் பரிசீலித்துக்கொண்டிருக்கும் வேளையில், கொரோனா கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் திணறுகிறது என்று அந்நாட்டு சுகாதாரத்துறையின் உச்ச அதிகாரி ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மதுக்கூடங்களையும் உணவகங்களையும் அரசாங்கம் மூடியிருக்கும் வேளையில், வீட்டிலேயே தங்கியிருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தும் அரசாங்க அறிவிப்பைப் பொருட்படுத்தாமல் பாரிஸ் நகர மக்கள் பெருந்திளராக நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர் என்றும் திரு சாலமன் நேற்று கூறினார்.
"வீட்டிலேயே தங்கியிருக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளவில்லை. இந்த அளவுக்கு மக்கள் நாட்டின் அதிகாரத்துவ அறிவிப்பைப் புறக்கணிக்கிறார்கள் என்றால், கொரோனா கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதில் நாங்கள் வெற்றி காணப்போவதில்லை என்று அச்சப்படுகிறோம்," என்று திரு சாலமன் பிரான்ஸ் இன்டர் வானொலியிடம் கவலை தெரிவித்தார்.
"கொரோனா கொள்ளைநோயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு பிரான்ஸ் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்," என்று திரு சோலமன் கூறினார்.
இதற்கிடையே, பிரான்சில் நேற்று முன்தினம் கொரோனா கிருமித்தொற்றுக்கு 29 பேர் பலியாகினர். இது ஒரே நாளில் அதிகமானோர் மரணமுற்ற எண்ணிக்கை. இதுவரை பிரான்சில் கொரோனா கொள்ளைநோய்க்கு 127 பேர் மடிந்துவிட்டனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவியேர் வெரான் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அங்கு புதிதாக 900 கிருமித்தொற்று சம்பவங்கள் நிகழ்ந்தன என்றும் கடந்த ஜனவரியிலிருந்து இதுவரை 5,400 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று பிரான்ஸ் தொலைக்காட்சி கூறியது.
பிரான்ஸ் தனது முதற்கட்ட நகராட்சி தேர்தலை நேற்று முன்தினம் நடத்தியிருக்கும் வேளையில், கிருமித்தொற்று அச்சத்தால் வாக்களிப்பு நிலையங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வந்திருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"வரும் நாட்களில் அரசாங்க அதிகாரிகள் அறிவியல் ஆலோசகர்களைச் சந்தித்து இரண்டாம் கட்ட தேர்தலை அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடத்துவது பற்றி ஆலோசனை கேட்கப்படும் என்றும் திரு வெரான் சொன்னார்.
கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளை முடக்கிவிடுவது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று பரவும் வதந்தி பற்றி கருத்துரைக்க திரு வெரான் மறுத்து விட்டார்.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளியலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு உதவ, பில்லியன் கணக்கான யூரோவை செலவழிக்க பிரான்ஸ் தயார் நிலையில் உள்ளது என்று அதன் நிதி அமைச்சர் புருனோ லேமேர் தெரிவித்து உள்ளார்.

