கோலாலம்பூர்: ஜோகூரில் உள்ள பெங்கெராங் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டு தீ மூண்டதில் ஐவர் மாண்டனர். பெட்ரோனாஸ்-சவூதி அராம்கோ கூட்டு ஒத்துழைப்பில் செயல்படும் தொழிற்சாலையில் ஞாயிறு இரவு தீ மூண்டது. உடனே அவசர காலக் குழு செயலில் இறங்கியது என்று பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
மறுநாள் திங்கள் கிழமை காலை 11.15 மணி வரை மீட்பு நடவடிக்கை நீடித்தது என்று ஜோகூர் மாநில தீ அணைப்புத் துறையின் கமாண்டர் அப்துல் ரஹ்மான் அஸெசூல்கிஃப்லி தெரிவித்தார்.
"விபத்தில் ஏழு பேர் சிக்கினர், ஒருவர் பாதுகாப்புடன் தப்பிவிட்டார். மற்றொருவருக்கு 70 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது. நால்வர் இறந்துவிட்டனர். ஒருவரைக் காணவில்லை," என்றார் அவர்.
பின்னர் காணாமல் போனவரும் இறந்துவிட்டதாக அவர் அறிவித் தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார். இதற் கிடையே ஜோகூர் சுல்தான் இப்ராஹிம், விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
அவரது இரங்கல் செய்தி அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஒரு வருட காலத்திற்குள் பெங்கெராங் ஒருங்கிணைக்கப்பட்ட வளாகத்தில் 2வது முறையாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

