பிலிப்பீன்ஸ், தென்கொரியா, கம்போடியா கிருமித்தொற்று சம்பவங்கள்

பிலிப்பீன்ஸ், தென்கொரியா, கம்போடியா கிருமித்தொற்று சம்பவங்கள்

2 mins read

மணிலா: பிலிப்பீன்சில் நேற்று புதிதாய் 45 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன என்றும் அவற்றையும் சேர்த்து அந்நாட்டில் மொத்தம் 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. அங்கு இதுவரை இந்தக் கொள்ளைநோய்க்கு 12 பேர் பலியாகி விட்டனர்.

சோல்: தென்கொரியாவில் நேற்று 84 புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. அவற்றையும் சேர்த்து அங்கு இதுவரை 8,320 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு நாள்தோறும் 100க்கும் குறை வான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. பிப்ரவரி 29ஆம் தேதி மட்டும் அங்கு 909 சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன.

புனோம்பென்: கம்போடியாவில் நேற்று 12 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அந்நாட்டில் மொத்தம் 24 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களில் 11 பேர் மலேசியாவில் நடைபெற்ற சமய நிகழ்வுக்குச் சென்றிருந்தனர்.

வெல்லிங்டன் (நியூசிலாந்து): கட்டுப்பாட்டை மீறிய வெளிநாட்டினர் மீது நியூசிலாந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு வாரங்களுக்குச் சுயதனிமைப்படுத்தும் உத்தரவை மீறிய இரு வெளிநாட்டினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நியூசிலாந்து குடிநுழை வுத் துறை நேற்று தெரிவித்தது. தென்கிழக்காசிய நாடு ஒன்றிலிருந்து வந்த அவர்கள் இரு வாரங்களுக்குப் பிறகு நியூசிலாந்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் இத்தகைய பொறுப்பற்ற போக்கை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்றும் நியூசிலாந்து குடிநுழைவுத் துறை பொது மேலாளர் திரு ஸ்டீபன் வோகன் கூறினார்.

கோலாலம்பூர்: ஜென்டிங் மலையில் உள்ள தனது பொழுது போக்குத் தளத்தை ஏப்ரல் 1ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடவிருப்பதாக ரிசோட்ஸ் வோர்ல்டு ஜென்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. "எங்கள் ஹோட்டல் வசதிகள், உணவு மற்றும் பானக் கிளைகள், சூதாட்டக்கூடம், ஸ்கைட்ரோ பொலிஸ் உள்ளரங்கு உல்லாசப் பூங்கா, கேளிக்கை வசதி கள், கடைத்தொகுதிகள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என்றும் அது கூறியது.