போலந்தின் சுற்றுப்புற அமைச்சருக்கு கொரோனா கிருமித்தொற்று
வார்சோ: போலந்தின் சுற்றுப்புற அமைச்சருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆக அண்மையில் நடத்தப்பட்ட போலந்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஒன்பது அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்துக்குச் செல்லவில்லை என்று போலந்தின் பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது. மருத்துவப் பரிசோதனைக்கான முடிவுகளுக்கான போலந்து அமைச்சர்கள் காத்துகொண்டிருக்கின்றனர். முடிவு வெளிவரும் வரை அமைச்சர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் முடக்கம்: பிரேசிலில் சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்
ரியோ டி ஜெனிரோ: கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிரேசிலில் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்கான விடுதலை சலுகைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது நடப்பிற்கு வர ஒருநாள் இருக்கையில், நூற்றுக்கணக்கான கைதிகள் சிறையிலிருந்து தப்பிவிட்டனர். கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட இருந்த இந்தச் சிறை முடக்க நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதற்குள் நான்கு சிறைச்சாலைகளிலிருந்து கிட்டத்தட்ட 1,000 கைதிகள் தப்பிவிட்டதாக பிரேசில் ஊடகம் தெரிவித்தது.
85,000 கைதிகளைத் தற்காலிகமாக விடுதலை செய்தது ஈரான்
தெஹ்ரான்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏறத்தாழ 85,000 சிறைக் கைதிகளை ஈரான் தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்டவர்களில் அரசியல் கைதிகளும் அடங்குவர் என்று ஈரானிய நீதித் துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பல கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டபோதிலும் கிருமித்தொற்றை எதிர்கொள்ள சிறைச்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெர்மனியில் 6,012 பேர் பாதிப்பு
பெர்லின்: ஜெர்மனியில் 6,012 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. கிருமித்தொற்றால் ஜெர்மனியில் மரண எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, ஜெர்மனிக்குத் திரும்ப முடியாமல் மற்ற நாடுகளில் சிக்கித் தவிக்கும் ஜெர்மன் சுற்றுப்பயணிகளைத் திருப்பிக்கொண்டு வர அந்நாட்டு அரசாங்கம் 50 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ளது. அவர்களை மீண்டும் ஜெர்மனிக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சு கூறியது.
எகிப்தில் 300 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
கெய்ரோ: எகிப்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா கிருமித்தொற்று காரணமாக அந்தக் கிராமத்தில் இருவர் உயிரிழந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருமித்தொற்று காரணமாக எகிப்தில் நான்கு பேர் மாண்டுள்ளனர். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த எகிப்து அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார்.
ஸ்பெயினில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
மட்ரிட்: ஸ்பெயினில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 10,000ஐ கடந்துவிட்டது. கிருமித்தொற்று காரணமாக அந்நாட்டில் 491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை ஸ்பெயினின் சுகாதார அவசரநிலை மையத்தின் தலைவர் திரு ஃபெர்னாண்டோ சைமன் நேற்று கூறினார். ஸ்பெயினின் 11,178 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 9,161ஆக இருந்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

