ரோம்: இத்தாலியின் கொரோனா கிருமித்தொற்றால் அந்நாட்டவர்கள் படாத பாடுபடுகின்றனர். கிருமித்தொற்று ஏற்பட்ட 16 மில்லியனுக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சோகம் போதாதென்று இறுதிச் சடங்கை உடனடியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் கிருமித்தொற்றால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருப்பதே இதற்கு காரணம்.
தேவாலயங்களில் உள்ள
மயானங்களில் சவப்பெட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இறுதிச் சடங்கு நடைபெற சவப்பெட்டிகள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இறந்தோரின் குடும்பத்தினர்களாலும் இறுதிச் சடங்குக்குப் போக முடியாததால் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.
இறந்தோர் பலரின் குடும்பத்தினர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிதான் கொரோனா கிருமித்தொற்றால் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
"மிகவும் விசித்திரமான சூழ்நிலையை நாங்கள் எதிர்நோக்குகிறோம். எங்களுக்கு இப்போது கோபம் வரவில்லை.
"ஆனால் கிருமியை முறியடிக்க முடியாத கையாளாகாத நிலையை நாங்கள் உணர்கிறோம்," என்று கிருமித்தொற்றுக்குத் தமது கணவரைப் பறிகொடுத்து அவரது இறுதிச் சடங்கிற்குப் போக முடியாமல் தவிக்கும் 70 வயது திருவாட்டி ஃபிராங்கா ஸ்டேஃபனேலி தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக இத்தாலி முற்றிலும் முடங்கிவிட்டது. தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கிட்டத்தட்ட 60 மில்லியன் இத்தாலியர்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர்.
வடஇத்தாலியில் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் 3,760 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பாவிலேயே இத்தாலியில்தான் அதிக முதியோர் இருக்கின்றனர்.
இதனால்தான் இத்தாலி அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தாலியில் 2,100க்கும் மேற்பட்டோர் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

