மலேசியாவில் இன்று (மார்ச் 18) புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 117 பேரையும் சேர்த்து அங்கு மொத்தம் 790 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய புதிய சம்பவங்களில் 80 ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசல் கிருமித்தொற்று வட்டாரத்துடன் தொடர்புடையவை. அந்த பள்ளிவாசல் கூட்டத்தின் தொடர்பிலான கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளது.
கோலாலம்பூருக்கு அருகில் உள்ள ஜாமெக் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நான்கு நாள் கூட்டத்துக்கு டாபிலிக் மிஷனரி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பிப்ரவரி 27 முதல் மார்ச் முதல் தேதி வரை நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் சுமார் 16,000 பேர் பங்கேற்றனர்.
அவர்களுள் சுமார் 1,500 பேர் சிங்கப்பூர், புரூணை, கம்போடியா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
நேற்று கிருமித்தொற்றால் மலேசியாவில் இருவர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் 34 வயதான ஆடவர். அவர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசல் கூட்டத்தில் பங்கேற்றவர்.
அவரது உடல் நேற்று இரவு 8.15 மணியளவில் சுல்தானா அமினா மருத்துவமனையிலிருந்து பெறப்பட்டது.
இரவு 8.45 மணியளவில் தனிநபர் பாதுகாப்புக் கவசம் அணிந்த 10 பேர் அவரது உடலைச் சுமந்து சென்று ஜோகூர் பாருவில் உள்ள முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்தனர்.
ஊடகத் துறையினர் உட்பட யாரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
மற்றோர் ஆடவர் சரவாக்கைச் சேர்ந்த 60 வயதான பாதிரியார்.
மலேசியாவில் இதுவரை 60 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

