வாஷிங்டன்: வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டோனல்ட் டிரம்ப் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜனநாயகக் கட்சியில் அவரை எதிர்த்து போட்டியிடுவது யார் என்பதை முடிவு செய்ய பல மாநிலங்களில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும், 77, பெர்னி சாண்டர்சும், 78 போட்டியிட முன்வந்துள்ளனர்.
ஆனால் ஜோ பைடனுக்கு பேராதரவு கிடைத்துள்ளதால் பெர்னி சாண்டர்ஸ் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை இழப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே உட்கட்சித் தேர்தலில் ஜோ பைடன் முன்னணியில் உள்ளார்.
இந்த நிலையில் அரிசோனா, இல்லியனோய், ஃபுளோரிடா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் ஜனநாயகக் கட்சியில் வேட்பாளர் நியமனம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இருப்பினும் கொரோனா கிருமி நெருக்கடி காரணமாக ஐந்து மாநிலங்களில் உட்கட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜோ பைடனை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்க காலதாமதமாகலாம் என கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரியிலிருந்து ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற 'சூப்பர் டியுஸ்டே' தேர்தலில் பெர்னி சாண்டர்சுக்கு சற்று முன்னேற்றம் கிைடத்தது.
ஆனால் இறுதி முடிவு இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் எஞ்சியவற்றில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றாக வேண்டும்.

