இத்தாலியில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஏப்ரல் 3ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜுசெப்பே கோன்டே தெரிவித்துள்ளார்.
கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடு இத்தாலிதான். இதை அடுத்து, கடந்த 12ஆம் தேதி முதல் அந்நாட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன; பொதுமக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைகள் இம்மாதம் 5ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளன.
அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை கல்வி நிலையங்களை மூடி இருக்கவும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், "ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியைக் காட்டிலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட வேண்டியது அவசியம்," என பிரதமர் கோன்டே நேற்று இத்தாலிய செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின்போது கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் மட்டும் இத்தாலியில் 475 பேர் மரணம் அடைந்தனர். கிருமித்தொற்றால் ஒரே நாளில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இதுவே ஆக அதிகம். இதனுடன் சேர்த்து, இதுவரை அங்கு 2,978 பேரின் உயிரை கொரோனா கிருமி பறித்துள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 35,000ஐத் தாண்டிவிட்டது.
இந்நிலையில், அடுத்த சில நாட்களில் கிருமித்தொற்று உச்சத்தை எட்டும் என்றும் அதன்பின்னர் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் தான் நம்புவதாக திரு கோன்டே சொன்னார்.
அப்படி மோசமான காலகட்டம் முடிவுக்கு வந்தாலும்கூட உடனடியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள லோம்பர்டி வட்டாரம், கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலையை நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆதலால், அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி லோம்பர்டி ஆளுநர் அட்டிலியோ ஃபோன்டானா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் அவற்றை மீறியதாக கிட்டத்தட்ட 43,000 பேர் பிடிபட்டனர் என்று இத்தாலிய உள்துறை அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

