நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த 5 நாட்களாக கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நியூயார்க் நகரில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கில் 2,382 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 9,300 பேருக்கும் கிருமித் தொற்று இருக்கும் நிலையில், இதன் காரணமாக 150 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் நியூயார்க்கில் சுமார் 10,000 பேர் வரை கிருமித் தொற்றால் பாதிக்கப்படலாம் என்று அந்நகர மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார்.
இந்த உயர்வுக்குக் காரணம் அதிகமானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுதான் என்றார் நியூயார்க் ஆளுநர் கம்போ. பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள 14,597 பேரில், இதுவரை 5,000 பேருக்கு பரிசோதனை முடிந்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்நிலையில், அமேசான் இணையத்தள வர்த்தகம், நியூயார்க் கிடங்கை தற்காலிகமாக மூடுவதாகக் கூறியது. அதன் இணை நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான மரியோ தியாஸ்-பாலர்ட், பின் பெக் ஆடம்ஸ் ஆகிய இருவருக்கு கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் கிருமித் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

