லண்டன்: பிரிட்டனில் கிருமித் தொற்றுக்கு 104 பேர் பலியானதைத் தொடர்ந்து, நேற்று முதல் அங்கு பள்ளிகள், சில ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
கிருமித் தொற்றால் 2,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டனில் சுமார் 55,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் இவ்வார தொடக்கத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிருமிப் பரவல் மேலும் மோசமாகும் பட்சத்தில், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் பிரிட்டன் முடக்கப்படலாம் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கிருமித் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் வேளையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை பிரிட்டனில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்றார் அவர்.
கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு மற்ற நாடுகள் வேகமாக செயல்பட்டு, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பிரிட்டனில் பள்ளிகளை மூடுவது குறித்த முடிவு விரைந்து எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்துக்கு ஆளானார் ஜான்சன்.
ஆனால், அரசாங்க உயர் மட்ட விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின்படி தான் சரியான நேரத்தில் முடிவெடுத்துள்ளதாக சொன்னார் ஜான்சன்.
பள்ளிகளை மூடும் இந்த முடிவால் பிரிட்டனில் சுமார் 8.7 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், முக்கிய பணியாளர்கள் என்று வகைப்படுத்தப்படும் மருத்துவ ஊழியர்கள், அவசர சேவை ஊழியர்கள், விநியோக ஓட்டுநர்கள் போன்றோரின் பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த அறிவிப்பு வரும் வரை பூமிக்கு அடியில் செயல்படும் 40 ரயில் நிலையங்கள் மூடப்படும் என்றும் பேருந்து, இதர ரயில் சேவைகள் குறைக்கப்படும் என்று லண்டன் போக்குவரத்து ஆணையம் சொன்னது.
இதையடுத்து பிரிட்டன் முடக்கப்படலாம் என்ற பதற்றம் நிலவியதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க, மழையையும் பொருட்
படுத்தாமல் நேற்று காலையே மக்கள் கடைகளுக்கு முன் வரிசை கட்டி நின்றனர்.
மேலும் பிரெக்சிட் மாற்றத்திற்குப் பிந்திய காலக்கட்டத்தில் இருந்து இங்கிலாந்தை வெளியேற்றுவதற்கான திட்டம் தாமதப்படாது என்றும் ஜான்சன் சொன்னார்.

