மட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களும் மரணங்களும் அதிகரித்து வரும் வேளையில், அங்கு அனைத்து ஹோட்டல்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், கிருமிப் பரவலை எதிர்கொள்ள தாதிமை இல்லங்களுக்கு உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் ஸ்பெயினில் இதுவரை 1,002 பேர் இறந்துவிட்டனர்; கிட்டத்தட்ட 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பயணத்துறை நலிந்து வரும் நிலையில், அங்கு கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அனைத்து ஹோட்டல்களும் பயணிகள் தங்குவிடுதிகளும் அடுத்த ஏழு நாட்களுக்குள் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகில் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் நாடுகளின் பட்டியலில் 2018ஆம் ஆண்டில் ஸ்பெயின் இரண்டாம் இடத்தை பிடித்தது.
இந்நிலையில், இந்தக் கிருமித்தொற்று காரணமாக ஸ்பெயின் ஏற்னெவே தனது நாட்டின் தரைவழி எல்லைப் பகுதிகளை, குடிமக்கள், நிரந்தரவாசிகளாக இல்லாதவர்களுக்கு மூடிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் நீண்டகால தங்கும் வசதிகள் வழங்கும் விடுதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் இந்தத் தங்குவிடுதிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்பெயினில் தற்பொழுது அவசியமிருந்தால் மட்டுமே மக்கள் வெளியில் நடமாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கிருமிப் பரவல் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளில் உதவ பல்லாயிரக்கணக்கான ராணுவப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனிநாடு கேட்டுப் போராடி வரும் கேட்டலோனியாவில் விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா கிருமியைத் துடைத்து ஒழிக்கும் பணிய மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

