பாகிஸ்தானில் பெருகும் கொவிட்-19 சம்பவங்கள்; முடக்க நிலையை அறிவிக்க மறுக்கும் பிரதமர்

பாகிஸ்தானில் பெருகும் கொவிட்-19 சம்பவங்கள்; முடக்க நிலையை அறிவிக்க மறுக்கும் பிரதமர்

1 mins read
56b3359c-735b-4a95-8870-2d3d3dda4dab
பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் முகக் கவசங்களுடன் ராணுவ வீரர்கள். படம்: ஏஎஃப்பி -

பாகிஸ்தானில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துவிட்ட நிலையில், நாடு தழுவிய முடக்கநிலையை அறிவிக்க அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் மறுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கொரோனா கிருமித்தொற்றுக்கு இதுவரை மூவர் உயிரிழந்துவிட்டனர். உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை நேற்று (மார்ச் 20) 501ஆக இருந்தது.

அந்நாட்டின் சிந்த் மாநிலத்தில் மட்டும் 252 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கிருமி பரவலைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தான் முழுவதும் முடங்கவும் விமானச் சேவைகளை ரத்து செய்யவும் பகுப்பாய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அதற்கு செவிமடுக்க மறுத்துவிட்ட பிரதமர் இம்ரான் கான், "நாட்டை முடக்குவது என்பது ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்குச் சமம். அப்படி செய்தால், நாட்டில் பதற்றநிலை அதிகரிக்கும். ஏழை, எளியவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்நடவடிக்கை நமக்கு சரிப்பட்டு வராது," என்று சொன்னார்.

நாட்டுப் பொருளியலுக்கான உதவித் திட்டம் ஒன்று வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

"பொருளியல் உதவித் திட்டங்களை அறிவிக்கும் மற்ற உலக நாடுகளுடன் எங்களால் போட்டியிட முடியாது. எனினும், சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை கொரோனா பாதிப்பிலிருந்து நாங்கள் பாதுகாப்போம். அறிவிக்கப்படவுள்ள உதவித் திட்டம் அந்த முயற்சிக்கு கைகொடுக்கும்," என்று அவர் கூறினார்.

கொரோனா கிருமித்தொற்றைக் கண்டறிவதற்கும் அதைக் குணப்படுத்துவதற்கும் பாகிஸ்தானில் அத்தியாவசிய மருத்துவச் சாதனங்கள் போதுமான அளவில் இல்லை.

சாதனங்கள் வழங்கப்படும் வரை தாங்கள் போராட்ட நடத்தப் போவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

#பாகிஸ்தான் #கொரோனா

குறிப்புச் சொற்கள்