10 மில்லியன் முகக்கவசங்களை சீனாவிடமிருந்து வாங்கும் மலேசியா

10 மில்லியன் முகக்கவசங்களை சீனாவிடமிருந்து வாங்கும் மலேசியா

2 mins read
4c61cc81-c33a-4525-884c-3f31477cb8f0
மலேசியாவில் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், தங்களது திருமண நிகழ்வுகளில் முகக்கவசங்களுடன் பங்கெடுத்த மணமகன் முகம்மது நோர் அஸ்வான் இ‌‌‌ஷாக், 27, மணமகள் நூரமிராலியா நூர்பா‌‌‌ஷா, 25. படம்: ஏஎஃப்பி -

சீனாவிலிருந்து 10 மில்லியன் முகக்கவசங்களை உள்ளூர் பயன்பாட்டுக்காக வாங்க இருப்பதாக மலேசியாவின் மூத்த அமைச்சர் ஃபாடில்லா யூசோஃப் இன்று (மார்ச் 21) தெரிவித்தார்.

அவற்றை கட்டங்கட்டமாக விமானம் மூலம் மலேசியாவுக்கு கொண்டு வருவதன் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

முகக்கவசங்கள் மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு அவற்றை விநியோகிக்கும் பணியை தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பான Nadma மெற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

முதல்நிலை சுகாதார பராமரிப்பு ஊழியர்கள், குறிப்பாக தேசிய, மாநில அளவிலான சுகாதார அமைச்சின் ஊழியர்கள், போலிசார், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கண்காணிக்கும் ராணுவத்தினர் ஆகியவர்களுக்கு அவற்றை விநியோகிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் திரு ஃபாடில்லா.

நாட்டு எல்லைகளில் பணிபுரியும் குடிநுழைவு, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கும் அவை விநியோகிக்கப்படும்.

"எஞ்சிய முகக்கவசங்கள் விற்பனைக்கு வழங்கப்படும். இந்த விநியோகத்தை Nadma நிர்வகிக்கும்," என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு விற்கப்படும், இறக்குமதி செய்யப்பட்ட முகக்கவசங்களின் விலையை நிதி, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனாளர்கள் விவகாரம், போக்குவரத்து ஆகிய அமைச்சுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு நிர்ணயிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

"முகக்கவசங்கள் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம்," என்று மக்களுக்கு கூறிய அவர், "கிருமித்தொற்று அறிகுறி இல்லாதவர்களும் கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது," என்றார்.

#மலேசியா #முகக்கவசம்

குறிப்புச் சொற்கள்