இளையர்களையும் விடாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இளையர்களையும் விடாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

2 mins read
039bd043-5c3d-468a-8c60-03f24fd698f4
கொரோனா கிருமி எல்லா வயதினரையும் தாக்கும் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிருமி இளையர்களையும் தொற்றும் என்பதால் அவர்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆதலால், அவர்கள் வயதானவர்கள், எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரிடம் இருந்து பாதுகாப்பான இடைவெளியில் இருக்குமாறு அந்த அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.

ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து காணொளி மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் டெட்ரோஸ் கெப்ரயேசுஸ், "கொரோனா கிருமித்தொற்றால் முதியவர்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் இளையர்களையும் அது விட்டுவைக்காது," என்று சொன்னார்.

"இளையர்களுக்கு எனது செய்தி இதுதான்: நீங்கள் வீழ்த்தப்பட முடியாதவர்கள் அல்லர். கொரோனா கிருமி வாரக் கணக்கில் உங்களை மருத்துவமனையில் தள்ளிவிடும், ஏன் கொல்லக்கூடச் செய்யும். உங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படாவிட்டாலும்கூட, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பது பற்றிய உங்களின் தெரிவுகள், இன்னொருவருக்கு வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையே உள்ள வேறுபாடாக இருக்கலாம்," என்று திரு கெப்ரயேசுஸ் கூறினார்.

கொரோனா கிருமி எல்லா வயதினரையும் தாக்கும் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. அதே நேரத்தில், வயதானவர்களையும் ஏற்கெனவே வேறு பல உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படு வோரையும் அது எளிதில் தொற்றிவிடுகிறது.

இதனிடையே, மனிதர்களுக்கு இடையே 'உடலளவில் இடைவெளி' இருக்கும்படி பார்த்துக்கொள்வது கிருமி தொற்றாமல் தடுக்க உதவும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

"இப்போதைய சூழலில், உடல் நலத்தைப் போல மனநலத்தைப் பேண வேண்டியதும் முக்கியம். ஆதலால், மக்களுக்கு இடையே தொடர்பு நீடிக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இணையம், சமூக ஊடகங்கள் போன்றவை மூலமாக மற்றவர்களுடன் தொடர்பில் இருங்கள்," என்று உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தொற்றியல் நிபுணர் மரியா கெர்க்கோவ் வலியுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு நாளைய (மார்ச் 22) தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#கொரோனா #உலகம் #இளையர்

குறிப்புச் சொற்கள்