கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக 153 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, கிருமி தொற்றியுள்ளோரின் எண்ணிக்கை 1,183ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்காசியாவில் ஆக அதிகமானோர் கிருமித்தொற்று கண்டிருப்பது மலேசியாவில்தான்.
அந்நாட்டில் கொரோனா கிருமியால் நேற்று மட்டும் நான்கு பேர் உயிரிழந்தார். அவர்களையும் சேர்த்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக கூடியுள்ளது. கோலாலம்பூர் அருகே நடைபெற்ற சமய ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்ட 50 வயது மலேசியர் அவர்களில் ஒருவர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மலேசியாவில் இதுவரை 24 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளதாகவும் கூறிய அவர், அவர்களில் 19 பேர் தமது அமைச்சைச் சேர்ந்தவர்கள் என்றார்.
இந்தோனீசியாவில் அறுவர் பலி
இந்நிலையில், இந்தோனீசியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்தோனீசியாவில் புதிதாக 81 பேரை கொரோனா கிருமி தொற்றியுள்ளது. அவர்களையும் சேர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 450ஆக உயர்ந்துள்ளது.
ஜோகூர் படகு முனையத்தில் குவிந்த இந்தோனீசியர்கள்
பொதுமக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மலேசியா பிறப்பித்தது முதல், அந்த நாட்டில் உள்ள இந்தோனீசியர்கள் தாயகம் திரும்ப பரபரப்பு காட்டி வருகிறார்கள்.
ஜோகூர் மாநிலத்தில் பொந்தியானில் இருக்கும் குக்குப் அனைத்துலகப் படகு முனையத்தில் ஏராளமான இந்தோனீசியர்கள் திரண்டு வருகிறார்கள்.
மலேசியாவில் பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட முதல் நாளன்றே ஏராளமான இந்தோனீசியர்கள் படகு முனையத்தில் திரண்டதாக பொந்தியான் போலிஸ் தலைவர் முஸ்தபா பக்ரி சாலே தெரிவித்தார்.
ஜோகூர் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்போர் உட்பட ஏராளமான ஊழியர்கள் அவர்களில் அடங்குவர்.
பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தின்போது ஊழியர்களுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க இந்தோனீசியர்கள் விரும்புகிறார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
கொவிட்-19 தலைகாட்டத் தொடங்கியது முதலே ஜோகூர் மற்றும் இந்தோனீசியாவின் சுகாதாரத் துறைகள் உடல் வெப்பநிலைப் பரிசோதனை உட்பட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சோதனைச் சாவடிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றன என்று பொந்தியான் போலிஸ் தலைவர் நேற்று குறிப்பிட்டார்.
தேவைக்கேற்ப குக்குப் படகு முனையத்தில் இருந்து இந்தோனீசியாவில் உள்ள தஞ்சுங் பாலாய் துறைமுகத்திற்கு அதிகப் படகுச் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, படகு முனையத்தில் காணப்படும் கூட்டத்தைக் காட்டும் படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் தஞ்சோங் பியாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வீ ஜெக் செங் பதிவேற்றியிருந்தார்.
படகு முனையத்தில் பெரும் கூட்டம் திரள்வதால் மேலும் பலரைக் கிருமி தொற்றிவிடலாம் என்று அந்த வட்டார கிராம மக்கள் பயப்படுவதால் இதன் தொடர்பில் ஜோகூர் முதல்வர், பொந்தியான் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உடனே நடவடிக்கை எடுக்கும்படி தான் தெரிவித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

