மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியவருக்கு 5,000 ரிங்கிட் அபராதம்

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியவருக்கு 5,000 ரிங்கிட் அபராதம்

2 mins read
170361df-178b-422a-877a-5926995acc9e
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 33 வயதான புண்ணியமூர்த்தி (கறுப்பு நிறச் சட்டையில் கையில் விலங்குடன்) என்பவர் மீது இன்று (மார்ச் 23) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. படம்: தி ஸ்டார் -

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 33 வயதான புண்ணியமூர்த்தி என்பவர் மீது இன்று (மார்ச் 23) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஆணையை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல் நபர் இவர். இந்த ஆணையின் தொடர்பில் பொதுத்துறை ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது. அது 14 நட்களுக்கு நடப்பில் இருக்கும் என்று கூறப்பட்டதுடன் அந்த ஆணை பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் போலிசாருடன், நாடு முழுவதும் 7,500 ராணுவத்தினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திரு புண்ணியமூர்த்திக்கு 5,000 மலேசிய ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தக் குற்றத்துக்காக அவருக்கு விதிக்கப்பட்ட 10 மாத சிறைத்தண்டனைக்குப் பதிலாக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை சுங்கை சிபுட்டின் தாமான் ஓர்கிட் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பு, தமது அடையாள ஆவணங்களை போலிசாரிடம் காட்ட மறுத்ததாகவும் போலிஸ் அதிகாரியைப் பிடித்துத் தள்ளியதாகவும் கூறப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 1 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அவர் அந்தச் சமயத்தில் மது போதையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் தண்டனைச் சட்டம் 186வது பிரிவின் கீழ் அவருக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை, 10,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கலாம்.

திரு புண்ணியமூர்த்திக்கு விதிக்கப்படும் தண்டனை சமுதாயத்துக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்பதால் அவருக்கு உயர்ந்தபட்ச தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

ஆனால், மாதம் 1,500 மட்டுமே சம்பாதிக்கும் அவர் தம் தாயாரைப் பராமரிக்க வேண்டியுள்ளது என்று புண்ணியமூர்த்தியின் வழக்கறிகஞர் கூறினார். இதற்கு முன்பு அவர் குற்றமேதும் புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

#மலேசியா #நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

குறிப்புச் சொற்கள்