சுடச் சுடச் செய்திகள்

'வாசனை தெரியவில்லையா? சுவையை உணர முடியவில்லையா? கிருமித்தொற்று இருக்கலாம்!'

நுகரும் திறன், சுவையை அறியும் திறன் ஆகியவற்றை இழப்போரைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்குமாறு மருத்துவர் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. அவர்களுக்கு கிருமித்தொற்றின் வேறு அறிகுறிகள் இல்லாமல்கூட இருக்கலாம்.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு தாயால், அவரது குழந்தை மலம் கழித்த நாற்றத்தைக்கூட உணரமுடியவில்லை. அதேபோல, வாசனையை வைத்தே உணவுப் பொருட்களை அடையாளம் காணும் திறன் கொண்ட சமையல் வல்லுநர்களால், கிருமித்தொற்று கண்ட பிறகு பூண்டின் வாசனையைக்கூட உணர முடியவில்லை; சுவையையும் அவர்களால் உணர முடியவில்லை.

கிருமித்தொற்று கண்ட பலரால பலவிதமான வாசனை, நாற்றங்களை உணர முடியாமல் போனது என்கிறது அந்த  மருத்துவர் குழு.

நுகர்வு, சுவை உணர்வுகளை இழப்போர் தங்களை 7 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு பிரிட்டனைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டனர். கிருமித் தொற்று பரவலை இது குறைக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக அமைந்துள்ள தரவுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இந்த எச்சரிக்கையை மருத்துவர்கள் விடுத்துள்ளனர்.

இத்தகைய திறன்களை இழப்பது கிருமித்தொற்றின் அடையாளம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம் என்று பிரிட்டி‌ஷ் ரைனலாஜிகல் சொசைட்டியின் தலைவர் பேராசிரியர் கிளேர் ஹாப்கின்ஸ் கூறியுள்ளார். 

இங்கிலாந்தின் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குழுவின் தலைவரான திரு நிர்மல் குமாரும் திருவாட்டி கிளேரும் சேர்ந்து, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நுகர்வு, சுவை உணர்வுகளை இழந்துவிட்டதாகக் கூறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தனிநபர் பாதுகாப்பு கவசங்களை அணிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த நோயாளிகளுக்கு கிருமித்தொற்று இருந்தால் அது மருத்துவப் பணியாளர்களுக்கும் தொற்றுவதிலிருந்து தடுப்பதற்காக இந்த அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதேபோல, கொரோனோ கிருமித்தொற்று கண்டவர்களில் பலருக்கு அறிகுறிகளே தென்படவில்லை; சிலருக்கு தாமதமாக அறிகுறிகள் தென்பட்டன. அத்தகையோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

அறிகுறிகள் ஏதுமின்றியோ அல்லது தாமதமாக அறிகுறிகள் தென்பட்டாலோ, அத்தகையோரிடமிருந்து மற்றவர்களுக்கு கிருமி பரவும் சாத்தியம் அதிகம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதனால், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon