ஊழியர் சேமநிதியிலிருந்து மாதந்தோறும் 500 ரிங்கிட்; நடமாட்டக் கட்டுப்பாடும் நீட்டிக்கப்படலாம்

ஊழியர் சேமநிதியிலிருந்து மாதந்தோறும் 500 ரிங்கிட்; நடமாட்டக் கட்டுப்பாடும் நீட்டிக்கப்படலாம்

2 mins read
aa4ef99b-403b-4681-91e5-13a1abdd054a
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வார காலத்துக்கு நீட்டிக்கப்படக்கூடும் என்று அந்த நாட்டின் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வார காலத்துக்கு நீட்டிக்கப்படக்கூடும் என்று அந்த நாட்டின் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாகவும் எண்ணெய் விலை வீழ்ச்சியின் காரணமாகவும் நாட்டின் பொருளியலுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் ஊக்குவிப்புத் திட்டங்களை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் திரு முகைதீன் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் மார்ச் 30ஆம் தேதி கூடி, இப்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 31ஆம் தேதியுடன் முடிவடைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்க ஏற்கெனவே 20 பில்லியன் ரிங்கிட் (S$6.56 பில்லியன்) உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது உதவித் தொகுப்பு பற்றி அடுத்த திங்கட்கிழ்மை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பொருளியலை ஊக்குவிக்க புதிய திட்டங்களும் அப்போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருமித்தொற்று பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் 55 வயதுக்கும் குறைவான ஊழியர் சேமநிதி சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து மாதந்தோறும் அதிகபட்சம் 500 ரிங்கிட் வரை எடுக்கலாம் என பிரதமர் முகைதீன் அறிவித்துள்ளார். 40 பில்லியன் ரிங்கிட் இந்த வகையில் மக்களுக்குச் சென்று சேரும் என்று கூறப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் தேதி தொடங்கும் இந்தத் திட்டம் அடுத்த ஓராண்டுக்கு நடப்பில் இருக்கும்.

அத்துடன், ஊழியர்களின் சேமநிதி பங்களிப்பு விகிதமும் 4% குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், அன்றாடச் செலவுகளுக்கான பணம் ஊழியர்களிடம் இருக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கான உபகரணங்கள் வாங்குவதற்காக 500 மில்லியன் ரிங்கிட்டும், சுமார் 2,000 ஒப்பந்த சுகாதாரத்துறை ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதற்காக கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

#மலேசியா #உதவித் திட்டம்

குறிப்புச் சொற்கள்