ரோம்: கொரோனா கிருமித்தொற்றால் உலகிலேயே ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் நேற்று முன்தினம் மேலும் 651 மரணங்கள் பதிவாகின. அவற்றையும் சேர்த்து, அந்நாட்டில் கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,500ஐ நெருங்கிவிட்டது.
கடந்த சனிக்கிழமை பதிவாகியிருந்த மரண எண்ணிக்கையான 793ஐவிட நேற்று முன்தினம் பதிவான எண்ணிக்கை குறைவு என்றாலும், இத்தாலியில் ஒரு மாதகாலமாக நெருக்கடி நிலை நீடித்துவரும் வேளையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பது அந்நாட்டு அரசாங்கத்தைப் பெரும் கவலை அடையச் செய்துள்ளது.
இத்தாலியில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10.4 விழுக்காடு அதிகரித்து 59,138ஆக பதிவானது.
இந்நிலையில், கிருமி பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இத்தாலியில் பதிவாகிய புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 30.4 விழுக்காடு சம்பவங்கள் மட்டும் கிருமி பரவல் இடமாகக் கண்டறியப்பட்டுள்ள லம்பார்டியில் உறுதிசெய்யப்பட்டன.
முன்னதாக, ஒவ்வொரு நாளும் மூன்றில் இரண்டு பங்கு சம்பவங்கள் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லம்பார்டியில் பதிவாகியிருந்தன. நேற்று முன்தினம் பதிவான மரணங்களில் 55.5 விழுக்காடு மரணங்கள், பத்து மில்லியன் பேரைக் கொண்ட லம்பார்டியில் பதிவாகின.
"லம்பார்டியில் பாதிப்பு சற்று குறைந்து வருவதுபோல தெரிந்தாலும் நாம் முன்கூட்டியே எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.
"நிலைமை எப்படி போகிறது என்பதைத் தொடர்ந்து அணுக்கமாக கண்காணிக்க வேண்டும்," என்று இத்தாலிய அரசாங்க அறிவியல் குழு நிபுணர் ஃபிராங்கோ லோகோடெல்லி கூறினார்.
இத்தாலியின் உலகத் தரம்வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறையை கொரோனா கிருமித்தொற்று பெரும் சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
அந்நாட்டில் முதன்முறையாக, கொரோனாவுக்காக தீவிர சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 3,000ஐ எட்டியுள்ளது.

