நியூயார்க்: நுகரும் திறன், சுவையை அறியும் திறன் ஆகியவற்றை இழப்போரைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்குமாறு மருத்துவர் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. அவர்களுக்கு கிருமித்தொற்றின் வேறு அறிகுறிகள் இல்லாமல்கூட இருக்கலாம்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு தாயால், அவரது குழந்தை மலம் கழித்த நாற்றத்தைக்கூட உணரமுடியவில்லை. அதேபோல, வாசனையை வைத்தே உணவுப் பொருட்களை அடையாளம் காணும் திறன் கொண்ட சமையல் வல்லுநர்களால், கிருமித்தொற்று கண்ட பிறகு பூண்டின் வாசனையைக்கூட உணர முடியவில்லை; சுவையையும் அவர்களால் உணர முடியவில்லை.
கிருமித்தொற்று கண்ட பலரால் பலவிதமான வாசனை, நாற்றங்களை உணரமுடியாமல் போனது என்கிறது அந்த மருத்துவர் குழு.
நுகர்வு, சுவை உணர்வுகளை இழப்போர் தங்களை 7 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு பிரிட்டனைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டனர். கிருமிப் பரவலை இது குறைக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு ஆதாரமாக அமைந்துள்ள தரவுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இந்த எச்சரிக்கையை மருத்துவர்கள் விடுத்துள்ளனர். இத்தகைய திறன்களை இழப்பது கிருமித்தொற்றின் அடையாளம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம் என்று 'பிரிட்டிஷ் ரைனலாஜிகல் சொசைட்டி'யின் தலைவர் பேராசிரியர் கிளேர் ஹாப்கின்ஸ் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குழுவின் தலைவரான திரு நிர்மல் குமாரும் திருவாட்டி கிளேரும் சேர்ந்து, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

