ஃபிராங்ஃபர்ட்: ஜெர்மனியில் கொரோனா கிருமி தொற்றிய மருத்துவர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நேற்று முன்தினம் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இடைக்காலத்தில் வீட்டிலிருந்து வேலையைச் செய்யும் அவர், அடுத்த ஒரு சில நாட்களுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்று அவர் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை, நிமோனியாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றைப் பிரதமர் மெர்க்கல் போட்டுக்கொண்டார். ஆனால் அவருக்கு தடுப்பூசியைப் போட்ட மருத்துவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது பின்னர் உறுதிசெய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருந்தவர் என்ற வகையில், தற்போது பிரதமர் மெர்க்கல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில், பொது இடங்களில் இருவருக்கும் அதிகமானோர் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று பிரதமர் மெர்க்கல் முன்னதாக தொலைக்காட்சிவழி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார்.

