லண்டன்: கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் பிரிட்டனில் அறிவிக்கப்பட்ட முடக்கத்தை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். வீட்டிலேயே இருக்கும்படி அவர் பிரிட்டிஷ் மக்களை கேட்டுக்கொண்டார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிரிட்டனில் மரணம் அடைந்தோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 335க்கு உயர்ந்தது.
பிரிட்டிஷ் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்புச் சாதனங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்புச் சாதனங்களை அந்நாட்டு ராணுவம் அனுப்பி வைக்க உதவும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
"பிரிட்டிஷ் மக்களுக்கு நான் மிக எளிமையான உத்தரவையிடுகிறேன். நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்," என்று தொலைக்காட்சி மூலம் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க, உடற்பயிற்சி செய்ய, மருத்துவ உதவி பெற, பராமரிப்புச் சேவை வழங்க, அவசியம் ஏற்பட்டால் மட்டும் வேலைக்குச் சென்று வர மட்டும் பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.
தங்கள் வீட்டில் வசிக்காத குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோரைச் சந்திக்கக்கூடாது என்று திரு ஜான்சன் தெரிவித்துள்ளார்.
"விதிமுறைகளை நீங்கள் மீறினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலிசாருக்கு அதிகாரம் உண்டு. அபராதம் விதிப்பது, கூடியிருப்போரைக் கலைப்பது போன்றவை அதில் அடங்கும்," என்று திரு ஜான்சன் தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மூடப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. துணிக்கடைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், வெளிப்புற உடற்பயிற்சிக்கூடங்கள், வழிபாட்டுத் தளங்கள் முதலியவை மூடப்படும்.
வீட்டிலேயே இருக்கும்படி பிரிட்டிஷ் அரசாங்கம் அண்மையில் வலியுறுத்தியும் கடந்த வாரயிறுதியில் மில்லியன்கணக்கானோர் பூங்காக்கள் போன்ற இடங்களுக்குச் சென்றனர்.
ஒருவருக்கொருவர் இடையே குறைந்தது 2 மீட்டர் தூர இடைவெளி இருக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட உத்தரவை பிரிட்டிஷ் மக்கள் அலட்சியப்படுத்தினர். இதன் காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கம் தற்போது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த கிருமித்தொற்று பிரிட்டன் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் மிக மோசமான மிரட்டல் என்று திரு ஜான்சன் கூறினார். கிருமித்தொற்று தொடர்ந்து வேகமாகப் பரவினால் ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கும் தேசிய சுகாதாரச் சேவையால் சமாளிக்க முடியாமல் போகும் என்று அவர் எச்சரித்தார்.

