மட்ரிட்: கொரோனா கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அந்நாட்டு ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் பராமரிப்பாளர்களின் கவனிப்பின்றி இருப்பதை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த முதியவர்களில் சிலர் தங்கள் படுக்கைகளிலேயே மாண்டு கிடக்கும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தப்படு வதாக ஸ்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சில முதியோர் இல்லங்களில் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதும் அங்கு பணியாற்றிய சுகாதாரப் பராமரிப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறியதாக ஸ்பானிய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மாண்ட முதியவர்கள் கொரோனா கிருமித்தொற்றால் இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
கிருமித்தொற்று காரணமாக ஸ்பெயினில் 2,182 பேர் மாண்டதாக நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டது. முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியது.

