இத்தாலியில் 6,800க்கு மேற்பட்ட உயிரிழப்புகள்; மீள முடியாமல் திணறல்

இத்தாலியில் 6,800க்கு மேற்பட்ட உயிரிழப்புகள்; மீள முடியாமல் திணறல்

2 mins read
6fe0a5bd-b5c7-425d-98f0-361ea8056a8e
இத்தாலியில் சுமார் 700,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிருமி பாதிப்பிலிருந்து இத்தாலி மீள முடியாமல் தவித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மரணங்களின் எண்ணிக்கை கூடியதால் மோசமான நிலைமையிலிருந்து மீண்டுவிட்டதாக நம்பிய அந்நாட்டு மக்கள் சோர்வடைந்துள்ளனர்.

செவ்வாய்க் கிழமை (மார்ச் 24) ஒரே நாளில் மட்டும் 743 பேர் மாண்டனர்.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கிருமி பரவத் தொடங்கியதிலிருந்து இது இரண்டாவது ஆக அதிக அளவிலான உயிரிழப்பாகும்.

இதற்கு முன்பு திங்கட்கிழமை (மார்ச் 23) அன்று 602 பேர் பலியாகினர்.

இத்தாலி மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக உயிர்ச்சேதங்களை சந்தித்து வருகிறது.

இதுவரை இத்தாலியில் கொரோனா கிருமி பாதிப்புக்கு 6,820 பேர் உயிரிழந்துவிட்டனர்.

செவ்வாய்க்கிழமை வரை கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,176ஐத் தொட்டுள்ளது.

இத்தாலியில் கிருமித் தொற்று அறிகுறிகள் அதிகம் உள்ளவர்களே மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதனால் கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று குடிமைப் பாதுகாப்பு முகவையின் தலைவர் கூறினார்.

அதாவது, சுமார் 700,000 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் முடக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக நிலைமை மேம்பட்டு வந்தது.

ஆனால் மரணங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் இத்தாலி அரசாங்கம் திணறி வருகிறது.

திங்கட்கிழமையிலிருந்து அனைத்து வர்த்தகங்களையும் அரசாங்கம் மூடியது.

அத்தியாவசியமான பணிகளுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பிரதமர் ஜுசெப்பே கோன்டே வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தையும் கடுமையாக்கியுள்ளார்.

முன்னைய அதிகபட்ச 206 யூரோவிலிருந்து தற்போது 3,000 யூரோவாக அபராதம் கூட்டப்பட்டுள்ளது.

#இத்தாலி #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்