வெலிங்டன்: நியூசிலாந்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு பள்ளிவாசல்களில் நுழைந்து தாக்குதல் நடத்திய ஆஸ்திரேலியர் தம் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.
இந்தத் தாக்குதலில் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 51 பேர் மாண்டனர்.
பிரென்டன் டாரண்ட் மீது மொத்தம் 51 கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக டிவிஎன்இசட் தொலைக்காட்சி தெரிவித்தது.
மேலும் கொலை செய்ய முயற்சி செய்த 40 குற்றச்சாட்டுகளையும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச் சாட்டையும் அவர் ஒப்புக் கொண்டதாக அது கூறியது.
2019ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் ேததியிலிருந்து டாரண்ட் போலிஸ் காவலில் இருந்து வருகிறார்.
அன்றைய தினம் கிறைஸ்ட் சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளி வாசல்களில் பலர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது தானியக்க துப்பாக்கி யுடன் நுழைந்தவன், கண்ணில் பட்டவர்களை நோக்கி சுட்டான்.
இதில் 51 பேர் மாண்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.
இந்தக் காட்சியை ஃபேஸ்புக் பக்கத்திலும் நேரடியாக அவன் ஒளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியரான 29 வயது டாரண்ட் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் முன்பு திட்டமிட்டபடி ஆறு வார வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதிபதி கேமரன் மன்டர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பு பின்னர் வழங்கப்படவிருக்கிறது.

