கொவிட்-19 தாக்கத்தைக் கையாள 250 பில்லியன் ரிங்கிட் ஆதரவுத் தொகுப்பை அறிவித்தது மலேசியா

கொவிட்-19 தாக்கத்தைக் கையாள 250 பில்லியன் ரிங்கிட் ஆதரவுத் தொகுப்பை அறிவித்தது மலேசியா

2 mins read
59edaf54-2426-4a0b-9b76-5bc02737cb25
250 பில்லியன் ரிங்கிட் (S$83.6 பில்லியன்) தொகையைப் பராமரிப்புத் தொகுப்பாக ஒதுக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிருமி பரவலால் உலகளவில் பொருளியல் பாதிப்பு பெருமளவு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு உதவ அரசாங்கங்கள் ஆதரவுத் தொகுப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளன.

மலேசியர்களுக்கு உதவும் நோக்கில் ஆகப் பெரிய பொருளியல் ஆதரவுத் தொகுப்பை இன்று (மார்ச் 27) பிற்பகல் மலேசியா அறிவித்தது. 250 பில்லியன் ரிங்கிட் (S$83.6 பில்லியன்) தொகையைப் பராமரிப்புத் தொகுப்பாக ஒதுக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்துள்ளார்.

அதில் 128 பில்லியன் ரிங்கிட் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும் 100 பில்லியன் ரிங்கிட் தொகை பாதிக்கப்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உட்பட வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்கவும் பயன்படுத்தப்படும்.

"நாட்டின் பொருளியலை வலுப்படுத்த 2 பில்லியன் தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதற்கிடையே, கடந்த மாதம் 27ஆம் தேதி 20 பில்லியன் ரிங்கிட் தொகை முதல் பொருளியல் ஆதரவுத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டது," என்றார் பிரதமர்.

முதல்நிலை சுகாதார ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்குதல், நான்கு வாரங்களுக்கு நடப்பில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் வருமான இழப்பைச் சந்தித்திருக்கும் குடும்பங்களுக்கு பண உதவி வழங்குதல் போன்றவை இன்று அறிவிக்கப்பட்ட ஆதரவுத் தொகுப்பில் இடம்பெறும்.

கடந்த மாதம் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 20 பில்லியன் ரிங்கிட் பொருளியல் ஆதரவுத் தொகுப்புக்கு மேலாக இந்தப் புதிய ஆதரவுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த பராமரிப்புத் தொகுப்பு, கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அனைவரின் சுமையைக் குறைக்கும் உடனடி ஆதரவாக இருக்கும்," என்றும் அவர் கூறினார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் உதவி நல்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஒரு மாதம்கூட முடிவடையாத நிலையில் மலேசியாவின் பெரிக்கத்தான் நேஷனல் அரசு, கொரோனா கிருமித்தொற்று காரணமாக பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

உபகரணங்கள் வாங்குவது, சுகாதாரத் துறையில், குறிப்பாக தாதியர் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்களைப் பணிக்கமர்த்துவது போன்றவற்றுக்காக மொத்தம் 600 மில்லியன் ரிங்கிட் தொகையை சுகாதார அமைச்சுக்காக ஒதுக்குவதாக கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) மலேசிய அரசாங்கம் அறிவித்தது.

மேலும், 55 வயதுக்குட்பட்ட ஊழியர் சேமநிதி பங்களிப்பாளர்கள் 12 மாதங்கள் வரை மாதந்தோறும் 500 ரிங்கிட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

மேலும் கொவிட்-19 கொள்ளைய்நோயைக் கையாள அனைத்து மாநிலங்களுக்கும் 130 மில்லியன் ரிங்கிட் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

#மலேசியா #தமிழ்முரசு #ஆதரவு தொகுப்பு

குறிப்புச் சொற்கள்