தமிழகத்தில் 35 பேருக்கு தொற்று; 500 மருத்துவர்கள் உட்பட 2,000 மருத்துவப் பணியாளர்கள் புதிதாக நியமனம்

தமிழகத்தில் 35 பேருக்கு தொற்று; 500 மருத்துவர்கள் உட்பட 2,000 மருத்துவப் பணியாளர்கள் புதிதாக நியமனம்

2 mins read
9a89c583-09b9-48d3-bc62-65e4e49b14fc
சென்னையில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் கிருமிநாசினி தெளிக்கும் தீயணைப்பாளர்கள். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா கிருமித்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கிருமித்தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மதுரையில் கொரோனாவால் இறந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பிலிருந்த 2 பேருக்கு கிருமித்தொற்று உள்ளது.

அதேபோல சென்னையைச் சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள முதல் மருத்துவமனை ஓமந்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. அது இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

முதல் 350 படுக்கைகளைக் கொண்டிருந்த அது, தற்போது 500 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக மாறியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 200 புதிய அவசர சிகிச்சை வாகனங்கள் உடனடியாக பயன்பாட்டுக்கு வரும் என்றும் அதற்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதேபோல புதிதாக சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

500 மருத்துவர்கள், 1,000 தாதியர், 1,508 ஆய்வக ஊழியர்கள் போன்றோரைப் பணிக்கு அமர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக முன்னதாக அவர் டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டிருந்தார்.

#கொரோனா #தமிழ்நாடு

குறிப்புச் சொற்கள்