வாஷிங்டன்: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் ஆக அதிக எண்ணிக்கையில் சம்பவங்கள் பதிவாகிய நாடாகியுள்ளது அமெரிக்கா.
உலக சுகாதார நிறுவனம் முன்னரே விடுத்திருந்த எச்சரிக்கை களின்படி, சீனாவையும் இத்தாலியையும் கிருமித்தொற்று சம்பவங் களின் எண்ணிக்கையில் நேற்று முன்தினம் அமெரிக்கா விஞ்சிவிட்டது.
இதனால் கிருமித்தொற்றின் மையப்பகுதியாக தற்போது அமெரிக்கா உள்ளது.
அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எண்ணிக்கை உறுதியாகாத நிலையில் குறைந்தது 1,288 பேர் அந்நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 85,500ஐ தாண்டிவிட்டது.
அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது அமெரிக்கா.
முதல் கிருமித்தொற்று சம்பவம் அங்கு ஜனவரி 22ஆம் தேதியன்று உறுதிசெய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
கடந்த திங்கட்கிழமையன்று பதிவான கிருமித்தொற்று சம்பவங்கள் மூன்று நாட்கள் கழித்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டன.
இதனால் பெருமளவில் பரவக்கூடிய இக்கிருமித்தொற்றைச் சமாளிக்கும் அளவுக்குத் தயார்நிலையில் அமெரிக்கா இல்லை என்று கூறப்படுகிறது.
கிருமித்தொற்று தொடர்பில் மக்களைச் சோதிப்பதில் அமெரிக்கா துரிதமாகச் செயல்படவில்லை என்றும் முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றுக்கு நாட்டின் பல மருத்துவமனைகளில் தட்டுப்பாடு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே நியூயார்க் நகரில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களும் உயிரிழப்புகளும் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்து வருகின்றன.
நாட்டின் பாதிக்கும் மேலான சம்பவங்கள் அப்பகுதியில் பதிவானவை என்று கூறப்படுகிறது.

