கொரோனா கிருமித்தொற்றால் இத்தாலியிலும் ஸ்பெயினிலும் மாண்டவர்களின் எண்ணிக்கை, இதற்குமுன் இல்லாத அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கிருமித்தொற்றால் ஆக அதிகமான உயிரிழப்பைச் சந்தித்துள்ள இத்தாலியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 919 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, அங்கு கிருமித்தொற்றால் மாண்டவர்களின் எண்ணிக்கை 9,134 ஆகக் கூடியது.
அத்துடன், இத்தாலியில் நேற்று முன்தினம் புதிதாக 5,959 பேரைக் கிருமி தொற்ற, மொத்த பாதிப்பு 86,500ஐ நெருங்கி விட்டது.
இதையடுத்து, கிருமித்தொற்று அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலி இரண்டாம் நிலையில் உள்ளது.
அந்நாட்டின் செழிப்பான வடபகுதியான லோம்பர்டி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வளம் குன்றிய தென்பகுதியிலும் கிருமி பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனிடையே, அண்டை நாடான ஸ்பெயினிலும் கொரோனா கிருமித்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிருமித்தொற்றால் நேற்று முன்தினம் 769 பேரும் நேற்று 832 பேரும் அங்கு உயிரிழக்க, மாண்டோர் எண்ணிக்கை 5,690ஆக உயர்ந்தது.
அதுபோல், அங்கு புதிதாகக் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கையும் 8,189 கூடி, 72,248ஆகப் பதிவானது.
ஸ்பெயினில் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு, மக்கள் நடமாட்டம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடான பிரான்சில் நேற்று முன்தினம் மட்டும் 299 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 16 வயது இளம்பெண்ணும் ஒருவர். பிரான்சில் கிருமித்தொற்றால் இதுவரை மாண்டுபோனவர்களில் ஆக இளையவர் அவர்தான். அதற்கு முந்தைய நாளைக் காட்டிலும் இது குறைவுதான். கடந்த வியாழக்கிழமை அங்கு 369 மரணங்கள் பதிவாகின.
மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களை மட்டும் கணக்கில் எடுத்துவரும் நிலையில் கூடிய விரைவில் ஓய்வுக்கால இல்லங்களில் மாள்வோர் பற்றிய தரவுகளைத் திரட்டும் பணியைத் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அது நடப்புக்கு வரும்போது, மரண எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அதாவது ஏப்ரல் 15ஆம் தேதி வரை அவசரநிலையை நீட்டிக்க பிரெஞ்சு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

