ஜகார்த்தா: கொவிட்-19 கிருமித்தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதையும் முடங்கச் செய்யாமல் வட்டார அளவில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை இந்தோனீசியா பரிசீலித்து வருகிறது.
உலகின் ஆகப் பெரிய தீவுகளின் கூட்டமானது இந்தோனீசியா. இங்கு 17,000க்கும் மேற்பட்ட தீவுகள், 34 மாகாணங்கள், 500க்கும் மேற்பட்ட நகரங்கள் உள்ளன. 270 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இந்நிலையில் முடக்கநிலையை அறிவிப்பதற்குப் பதிலாக வட்டார நிலையில் தனிமைப்படுத்தும் சாத்தியத்தைக் கருதி வருவதாக அரசியல், சட்ட மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் பேராசிரியர் மாஃபுட் செய்தியாளர்களுக்கு நேற்று அனுப்பிய காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் முடக்கநிலை வேறு, இது வேறு என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்த வட்டார நிலையில் தனிமைப்படுத்தும் அணுகுமுறைபடி, அந்தந்த பகுதி மற்றும் நகரங்களின் சமூகத்தினர் எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்று முடிவெடுக்கலாம். தங்களின் பகுதியில் ஏற்படும் கிருமித்தொற்றைப் பற்றி அங்கு இருப்பவர்களுக்குத்தான் நன்கு தெரியும். அதற்கு ஏற்பக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றார் நகர்ப்புறத்திட்ட நிபுணர் யாயாட் சுப்ரியாட்னா.
இதுவும் ஒரு வகையில் முடக்கநிலைதான் என்றாலும் 'முடக்கநிலை' என்று குறிப்பிட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதால் அரசாங்கம் இவ்வாறு கூறுவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 1,155 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கிருமித்தொற்று பாதிப்பால் 102 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்காசிய வட்டாரத்தில் ஆக அதிக மரண எண்ணிக்கை இது.
இந்நிலையில் பாதுகாப்பான சுகாதார உபகரணங்களின்றி கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது என்று இந்தோனீசிய மருத்துவ ஊழியர்கள் நேற்று மிரட்டல் அளித்தனர்.

