கொழும்பு: இலங்கையில் 2000ஆம் ஆண்டு டிசம்பரில் ஐந்து வயது குழந்தை உட்பட பல தமிழர்களைக் கொலை செய்ததற்காக சுனில் ரத்தினயாக்கே என்ற ராணுவ அதிகாரிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரை அதிபரின் சிறப்புக் கருணையின்பேரில் விடுவிப்பது என்று அந்நாட்டு அதிபர் கோத்தபாய ராஜபக்சே முடிவெடுத்து இருக்கிறார்.
அந்த முடிவை ஐநா அமைப்பின் மனித உரிமைகள் அமைப்பு கடுமையாகக் குறைகூறி கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
அதிபர், அந்தக் கொலைகார அதிகாரியைக் கருணைகாட்டி விடுவித்து இருப்பது அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று ஐநா அமைப்பின் மனித உரிமைகள் ஆணையத்தின் பேச்சாளர் ரூபர்ட் கோல்வில் ஜெனிவா நகரில் தெரிவித்தார்.
போர்க் குற்றங்கள், மானிட இனத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக தான் கொண்டுள்ள அனைத்துலகக் கடப்பாடுகளை நிறைவேற்றப்போவதாக இலங்கை அறிவித்து இருக்கிறது.
ஆனால் அந்த உறுதியில் இருந்து இலங்கை தவறிவிட்டது என்று ஐநா தெரிவித்துள்ளது.
ராணுவத்தில் ஸ்டாஃப் சார்ஜண்ட்டாக இருந்த சுனில், 2000 டிசம்பர் 19ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் எட்டு தமிழர்களைக் கொலை செய்துவிட்டார் என்று கொழும்பு உயர் நீதிமன்றம் 2015ல் தீர்ப்பளித்து அந்த அதிகாரிக்கு மரண தண்டனை விதித்தது.
அந்த அதிகாரி கொலை செய்த எட்டு பேரில் வில்வராஜா பிரசாத் என்ற ஐந்து வயது சிறுவனும் ஒருவன். அந்தப் படுகொலைகள் ''மிர்சுவில் படுகொலை'' என்று வர்ணிக்கப்படுகிறது.
படுமோசமான மனித உரிமைமீறல்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஒரு நியதியை அதிபர் ராஜபக்சே நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாக ஆணையம் கூறி உள்ளது.
அனைத்துலக நடுவர்கள் ஆணையமும் இலங்கை அதிபரின் முடிவைக் கண்டித்து உள்ளது.
இவ்வேளையில், அந்தக் கொலைகார அதிகாரி விடுவிக்கப்பட்டு உள்ளதை இலங்கை புத்தத் துறவியான மெடிலி பன்னலோகா மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கிறார்.

