பெட்டாலிங் ஜெயா: கொரோனா கிருமித்தொற்று காரணமாக மலேசியாவில் மேலும் ஏழு பேர் மாண்டுள்ளனர்.
மேலும் 150 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று நண்பகல் 12 மணி நிலவரப்படி மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மொத்தம் 34 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
மொத்தம் 2,470 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மலேசிய சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.
73 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
அவர்களில் 52 பேருக்கு செயற்கை சுவாச இயந்திரத்தின் உதவி தேவைப்படுவதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
இதற்கிடையே, மலேசியாவில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறி வெளியே சென்ற குற்றத்துக்காக பினாங்கின் மத்திய செபராங் பிராய் மாவட்டத்தில் 69 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஜோகூர் மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்குக் கட்டுப்படுவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதார, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் திரு ஆர்.வித்யானந்தன் கவலை தெரிவித்துள்ளார்.

