வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துவிட்டதாக இல்லினோய் மாநில அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொள்ளை நோய்க்குப் பலியான முதல் குழந்தை அது என நம்பப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா கிருமித்தொற்று மரணங்களில் ஒரு கைக்குழந்தையும் அடங்கும் என்று இல்லினாய்ஸ் ஆளுநர் ஜேபி பிரிட்ஸ்கெர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
சிக்காகோ நகரில் மாண்ட குழந்தை ஒரு வயதுக்கும் குறைவானது என்றும் அக்குழந்தைக்கு கொவிட்-19 கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டிருந்தது என்றும் இல்லினாய்ஸ் பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.
கொவிட்-19 கிருமி தொடர்பாக கைக்குழந்தை மரணம் இதுவரை நிகழ்ந்தது இல்லை என்று துறையின் இயக்குநர் கோஸி எஸைக் அறிக்கை ஒன்றில் கூறினார்.
குழந்தை மாண்ட விதம் குறித்த முழு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர், அந்தப் பச்சிளம் குழந்தையின் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் தாம் அதிர்ச்சியில் மூழ்கியதாகக் குறிப்பிட்டார்.
"குழந்தையை காலம் பறித்துச் சென்றுவிட்டது. இது அக்குழந்தையின் குடும்பத்துக்குத் தாங்க முடியாத சோகம். நாமும் துக்கப்படுகிறோம்," என்றார் அந்த அதிகாரி.

